சென்னை: தமிழகத்தில் வெயில் கடுமை அதிகரித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை 3ம் பருவத் தேர்வுகளை முன்னதாகவே நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோடை விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும், இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. வெயில் கடுமையால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்றும், அதனால் அவர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
அதன்படி, தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான மூன்றாம் பருவ ஆண்டு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்த தொடக்க கல்வித் துறை ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோளை ஏற்று முதல்வரின் உத்தரவுபடியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை மேற்கண்ட தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 17ம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
The post கடும் வெயிலால் முன்னதாக கோடை விடுமுறை; 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏப்.7ல் தேர்வு தொடக்கம் appeared first on Dinakaran.