566 சுங்கச்சாவடிகள் இந்தியாவில் செயல்படுகின்றன
78 சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.
65 லட்சம் வாகனங்கள் சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் பயணிக்கின்றன.
100 கோடி ரூபாய் சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் வசூலிக்கப்படும் கட்டணம்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் விரைவான பயணத்திற்காக இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகள் இதற்கு துணை நிற்கும் நிலையில், அவற்றில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் தான், வாகன உரிமையாளர்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் சிரமமாக மாறி வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் 65 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றின் மூலம் தினமும் ₹100கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகள் அனைத்திலும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதை சாதகமாக்கி கொண்ட சுங்கச்சாவடிகள், பயணிகள் என்ற பெயரில் வாகனங்களில் பயணிக்கும் மக்களின் பணத்தை கட்டணமாக வசூலித்து அதிரவைத்து வருகிறது.
இந்தியாவில் 29,666 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 566 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 5,400 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்தவகையில் இன்று (நள்ளிரவில் அமலானது) முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம், ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட 40சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ₹30முதல் ₹150வரை சுங்ககட்டணம் உயரும் என்று தகவல்கள் ெவளியாகி உள்ளது.
அதேநேரத்தில் இப்படி கட்டணம் வசூலித்தாலும் வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உரிய அடிப்படை வசதிகளை, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் செய்து ெகாடுக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் நிலைகள் குறித்து தன்னார்வ அமைப்புகள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 70சதவீத சுங்கச்சாவடிகளில் போதிய வசதியில்லை. பெரும்பாலான சுங்கச்சாவடிகள் விதிகளுக்கு புறம்பாகவே செயல்பட்டு வருகிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சாலைமேம்பாடு சார்ந்த தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இந்திய சுங்கச்சாவடிகள் சட்டத்தின்படி வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். முதலுதவிகள் அளிப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டிகள் வைத்திருக்க வேண்டும். சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கட்டாயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் எந்தவித தாமதம் இன்றியும், இடையூறு இல்லாமலும் செல்வதற்கு பிரத்ேயக வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் செல்ல பிரத்யேக வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனமும் செலுத்த ேவண்டிய சுங்ககட்டணங்களை உள்ளடக்கிய அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். சுங்கச்சாவடி அமைந்திருக்கும் இடத்தின் பெயர், தெளிவாக சுட்டிக்காட்டும் பெயர் பலகை அமைக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கும் போது, அடுத்து எந்த இடத்தில் சுங்கச்சாவடி இருக்கிறது என்ற விவரமும் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டாயம், வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பதற்கான அறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் சுங்கச்சாவடி சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் 70 சதவீத சுங்கச்சாவடிகளில் இவை முழுமையாக பின்பற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது. உதாரணமாக கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு செல்ல வேண்டுமானாலும் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டு ேதாறும் சுங்கக்கட்டணம் உயர்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அதிலும் சேலம்-உளுந்தூர் பேட்டை வழியாக கடந்து சென்னைக்கு செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பிட வசதி என்பது படுமோசமாக உள்ளது. பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நான்குவழிச்சாலையாக இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 2வழிச்சாலைகள் திடீரென வருகிறது. இதனால் கோர விபத்துகள் பெருகி வருகிறது. இதேபோன்ற நிலையில் தான் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் உள்ளன. எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் காலாவதியான
32 சுங்கச்சாவடியை மூடுங்க…
15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பதும் ஒன்றிய அரசின் விதியாகும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூட வேண்டும். ஆனால் மாறாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்தும் கட்டணம் வசூல்
ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் சுங்கச்சாவடி இருக்க வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை, சுங்கச்சாவடிகளுக்கு உட்பட்ட சாலைகள், புதிய சாலைகளாக அமைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை ஆணையமும், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களும், இதை அறவே கண்டுகொள்வதில்லை. எனவே தனியார் நிறுவனங்கள் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கின்றன? இந்த சாலையின் மதிப்பீடு என்ன? எவ்வளவு காலம் வசூலிக்கலாம்? என்று அனைத்திற்கும் ஒன்றிய அரசு, தெளிவான வரையறைகளை முன்வைக்க வேண்டும் என்பதும் போக்குவரத்து ஆர்வலர்களின் குமுறல்.
ஒரு லாரிக்கு ₹1000 கூடுதல் செலவு; லாரி உரிமையாளர்கள் புலம்பல்
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் கூறியதாவது:
சுங்கக்கட்டணத்தை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. செப்டம்பர் 1ம் தேதி பாதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கடந்த செப்டம்பரில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதே வேளையில் அரியலூர், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுங்கக்கட்டண உயர்வால், சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் ஒரு லாரிக்கு ₹800 முதல் ₹1000 கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் சுங்கக்கட்டணம் உயர்த்தும் போது, கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ஏற்றியுள்ள கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு தனராஜ் கூறினார்.
The post கட்டண கொள்ளை மட்டுமே இலக்கு 70% சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதியில்லை appeared first on Dinakaran.