* ஏ.சி., பிரிட்ஜ் வெடித்து சிதறியது
* பல்லாவரத்தில் நள்ளிரவில் பயங்கரம்
பல்லாவரம்: மதுரையை சேர்ந்தவர் தனலட்சுமி (43). பல் மருத்துவர். இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பாலவெங்கடேஷ் (45) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார் தனலட்சுமி. கடந்த 4 மாதங்களுக்கு முன் சென்னை கோட்டையில் உள்ள பல் மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்தார். ஜமீன் பல்லாவரம், பாரதி நகர், 4வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் தனியாக வசித்து வந்தார். வழக்கமாக தினமும் காலையில் வேலைக்கு சென்றால், இரவுதான் வீடு திரும்புவார். இந்நிலையில், கணவரை பிரிந்த சோகத்தில், கடந்த சில தினங்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு மதுரையில் உள்ள தனது சகோதரர் துரைகதிர்வேலுக்கு போன் செய்து, ‘நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என்று கூறி அழுதார். அவருக்கு துரைகதிர்வேல் ஆறுதல் கூறியுள்ளார். அவரிடம் பேசிய சில மணி நேரங்களில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனக்கு தானே உடலில் ஊற்றி கொண்டு தனலட்சுமி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியது. அலறி துடித்தார். சிறிது நேரத்தில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் பரவிய தீ, வீட்டில் இருந்த ஏ.சி, பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் மீதும் பற்றியது. அவைகளும் தனலட்சுமி உடலுடன் சேர்ந்து எரிய தொடங்கின. சிறிது நேரத்தில் வெப்பம் தாங்காமல் பிரிட்ஜ், ஏ.சி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
நள்ளிரவில் வெடி சத்தம் போன்ற பயங்கர சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனலட்சுமி உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, தனலட்சுமி உடல் கிடந்த இடத்தின் அருகிலேயே மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி கிடந்தது. மன உளைச்சலில் மண்எண்ணெய் ஊற்றி தனலட்சுமி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வந்த மருத்துவ கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.