புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிகழ்த்திய உரை குறித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ‘உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை குறித்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சில முக்கியமான தலைவர்கள், உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தத் தலைவர்கள், “உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.