கடந்த ஐபிஎல் சீசனில் இறுதி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்குக் காரணம் அவர்களது வழக்கத்துக்கு மாறான எதிர்பாரா காட்டடி ஆக்ரோஷம்தான். ஆனால் ஒரு சீசனில் செய்ததை மற்றொரு சீசனில் செய்ய முடியாது. ஏனெனில் எதிரணியினர் விழித்துக் கொள்வார்கள். அதை தடுப்பற்கான உத்திகளை வகுப்பார்கள். இது தெரியாமல் கண்மூடித்தனமான ஆக்ரோஷம் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொண்ட பெரிய தோல்வியாக (ரன்கள் அடிப்படையில்) அமைந்து விட்டது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025-ம் ஆண்டின் 15-வது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக கொல்கத்தாவிடம் சன்ரைசர்ஸ் வாங்கும் 5-வது தோல்வி இது. இதோடு மட்டுமல்லாமல் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவின் அல்ட்ரா அக்ரஷன் எடுபடாமல் வெகு சொற்பமாக இருவரும் ஆட்டமிழந்ததும் கொல்கத்தாவுக்கு எதிராகத்தான். அதாவது கொல்கத்தாவுக்கு எதிராக ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவின் அதிரடி பாச்சா இதுவரை எடுபடவில்லை என்பதோடு இருவரையும் தட்டிப் போட்டு தூக்குகின்றனர்.