வாஷிங்டன்: கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘பல காரணங்களுக்காக கனடா மற்றும் மெக்சிகோவிற்கு வரிகளை நாங்கள் அறிவித்துள்ளோம்.
சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு அமெரிக்கா வழங்கும் மிகப்பெரிய மானியங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடா மீது 25 சதவீத வரி மற்றும் மெக்சிகோ மீது தனியாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் காலப்போக்கில் உயரலாம் அல்லது உயராமல் போகலாம். கனடா, மெக்சிகோ ஒருபோதும் எங்களுக்கு வர்த்தகத்தில் நன்றாக இருந்தது இல்லை.
இரு நாடுகளும் அமெரிக்காவை வர்த்தகத்தில் நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளன. அவர்களிடம் இருக்கும் பொருட்கள் தேவையில்லை என்பதால் எங்களால் அதனை மிக விரைவாக ஈடு செய்ய முடியும். எண்ணெய்க்கு வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும். அமெரிக்காவுக்குள் பென்டானிலை அனுப்பியதற்காக சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என்றார்.
மேலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கு முயற்சித்தால் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தள பதிவில்,‘‘பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயற்சிப்பது தொடர்பாக யோசனை முடிந்துவிட்டது.
விரோதமாக தோன்றும் இந்த நாடுகளிடம் இருந்து இனி அந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதற்கோ அல்லது வலிமையான அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணய த்தை ஆதரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் உறுதியளிக்கவில்லையென்றால் அவர்கள் 100சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனை செய்வதில் இருந்து விடைபெறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* பிறப்புரிமை குடியுரிமை விவகாரத்தில் மேல்முறையீடு
அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிரான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் பெடரல் நீதிமன்றம் இதனை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘‘அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை என்பது ஆரம்ப காலத்தில் அடிமையாக அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ளவர்கள் அமெரிக்காவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெடரல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். உச்சநீதிமன்றத்தில் அதனை நாம் வெல்வோம் என்று நினைக்கிறேன். அந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
The post கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25 சதவீத வரி: பிரிக்ஸ் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.