தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பயிர்கள் சுமார் 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதமடைந்துள்ளன.