கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக, கடலில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி இறங்கும் சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர்.
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அதிகாலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை அதிகமானோர் படகில் சென்று பார்வையிடுகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் பலரும் கட லில் இறங்கி குளிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது கன்னியாகுமரி கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால் கடம் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் முக்கடல் சங்கமம் படித்துறை பகுதியில் போலீஸார் தடுப்புகள் அமைத்துள்ளனர். சுற்றுலா பாதுகாவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கடலுக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.
The post கன்னியாகுமரி கடலில் சீற்றம் காரணமாக பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ தடை விதிப்பு appeared first on Dinakaran.