பெங்களூரு: காண்ட்ராக்டர் தற்கொலை வழக்கு தொடர்பாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக பாஜக அமைச்சர் கேஎஸ் ஈசுவரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடக அரசு 40 சதவீதம் வரை கமிஷன் வாங்குவதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ராகுல்காந்தியும் சமீபத்திய பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்.
காண்ட்ராக்டர் தற்கொலை
இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டம் இண்டல்காவை சேர்ந்தவர் சந்தோஷ் கே பட்டீல். இவர் அரசு பணிகளை காண்ட்ராக்டர் எடுத்து மேற்கொண்டு வருகிறார். உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் விஷம் குடித்து சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். முன்னதாக முடித்த அரசு பணிகளுக்கான பணம் விடுவிக்க அமைச்சர் ஈசுவரப்பா 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும், அவர் தான் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறியிருந்தார்.
அமைச்சர் மீது வழக்கு
இதையடுத்து சந்தோஷ் பட்டீல் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அமைச்சர் ஈசுவரப்பா உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஈசுவரப்பாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெங்களூர் ராஜ்பவனில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
ராஜினாமாவுக்கு மறுப்பு
இதற்கு ஈசுவரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சந்தோஷ் பட்டீல் யார் என்று தெரியாது. என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என ஈசுவரப்பா குற்றம்சாட்டினார். மேலும், தான் எக்காரணம் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனை தற்போது கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் ஈசுவரப்பாவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் எனக்கூறி எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
விசாரணையை பொறுத்து..
இந்நிலையில் ஈசுவரப்பாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவீர்களா என இன்று முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ஈசுவரப்பா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்லை. வழக்கின் உண்மை தன்மை தான் முக்கியம். தற்போது தான் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. இந்த அறிக்கையில் என்ன வருகிறது என்பதையும், விசாரணையையும் பொறுத்து தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. கட்சி மேலிடத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகே அடுத்த நடவடிக்கையை எடுக்கலாம்” என்றார்.
அமைச்சர் பதவி ராஜினாமா
இந்நிலையில் இன்று மாலையில் ஈசுவரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கான கடிதத்தை நாளை முறைப்படி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்க உள்ளார். இதுகுறித்து ஈசுவரப்பா கூறுகையில், ‛‛கர்நாடக அரசுக்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் களங்கமற்றவன் என்பைதை விரைவில் நிரூபிப்பேன்” என்றார்.