சென்னை: இசைஞானி இளையராஜா மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அது தொடர்பான வீடியோவை முதல்வர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜாவும் – முதல்வர் ஸ்டாலினும் அன்பொழுக பேசிக் கொள்ளும் காட்சிகள் கவர்கின்றன. அந்த உரையாடலின்போது, “ஐயா தான் ‘இசைஞானி’ பட்டம் கொடுத்தார். அதை மாற்றவே முடியவில்லை.” என்று ஸ்டாலினிடம் இளையராஜா நெகிழ்ந்தார். ஸ்டாலினும் அதனை ஆமோதித்து ‘ஆம் அதுவே நிலைத்துவிட்டது’ என்றார் பெருமிதத்துடன்.
வீடியோ பின்னணியில் மெளனராகம் படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு..’ பாடலின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் இசைக்கப்பட இருவரின் சிரிப்பும் இணைந்து கொண்டது. இருவரும் இன்னும் பல நெகிழ்வாக நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ‘காரில் போகும்போது எப்போதுமே உங்கள் இசையைத் தான் கேட்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர், ‘இசைஞானி என்ற பெயரை ஐயா தான் வைத்தார்’ என்றார் இளையராஜா. அதற்கு ஸ்டாலின், “எத்தனை பட்டங்கள் வந்தாலும் கலைஞர் கொடுத்த இசைஞானி பட்டமே நீடிக்கிறது.” என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து “உங்களுடைய பிறந்தநாள் ஜூன் 3 தான் ஆனால் ஜூன் 2 என்று மாற்றி வைத்துக் கொண்டீர்களே” எனக் கேட்க, “இல்லை அப்பாவுக்காக” என்றார் இளையராஜா.