சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்துக்காக விரயம் செய்வதாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடியில் ‘கருணாநிதி பன்னாட்டு அரங்கம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையின் பெயரில் அரங்கம் அமைக்க மக்களின் வரிப்பணம் ரூ.525 கோடியை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயம்?