ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி மிரட்டினார். எனினும் அவரது தாக்குதல் ஆட்டத்திற்கு பலன் இல்லாமல் போனது.
மும்பை அணியின் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வானார். மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 2 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.