கரூர்: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் சனிக்கிழமை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்குழுவினர், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த தவெக நிர்வாகிகள் 2 பேரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.