கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்ரதுர்காவில் உள்ள ஹொலேகெரே சாலையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அங்கு சோதனை நடத்தியதில் ஷேக் சைஃபர் ரோஹ்மான் (33), முகமது சுமன் ஹூசேன் அலி (34), அன்வர் மஜ்ருல் (24), அஜில் ஷேக் (25), முகமது சாகிப் (31), ஃபகத் சனோவர் (35) ஆகிய 6 பேர் போலி பாஸ்போர்ட், விசா மூலம் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்க தேசத்தை சேர்ந்த இந்த 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கம் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த அவர்கள், போலி ஆதார் அட்டைகளை தயாரித்துள்ளனர். வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் போலியாக தயாரித்துள்ளனர் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.