* பிடதியில் 2வது விமான நிலையம் அமைக்க திட்டம்
பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க பிடதியில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 4,800 ஏக்கர் நிலம் கையப்படுத்தும் பணியை கர்நாடகா தொடங்கியுள்ளது. இதனால் ஓசூர் சர்வதேச விமான நிலைய திட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் இயங்கி வரும் கெம்பேகவுடா சர்தேச விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் இயங்கி வருகிறது. உள்நாட்டு விமான சேவை மட்டுமில்லாமல், பல வெளிநாடுகளுக்கும் நேரடியாக விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெங்களூரு மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மற்றொரு விமான நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் என்ற நிலைக்கு மாநில அரசு வந்துள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போதுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு மாநகரின் வடக்கு தொகுதியில் உள்ளது. புதியதாக அமைக்கப்படும் விமான நிலையத்தை மாநகரின் தெற்கு பகுதியில் அமைக்க வேண்டும் என்பதில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரின் நோக்கமாகவுள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் அவரின் சொந்த மாவட்டமான ராம்நகரம் மாவட்டத்தில் உள்ள பிடதியில் அமைக்க முடிவு செய்தார். விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலம் தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணைமுதல்வரின் உத்தரவை ஏற்று கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழக (கேஐஏடிபி) அதிகாரிகள் நிலம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள பிடதி தொழிற்பேட்டை அமைந்துள்ள கக்கலிபுரா, சின்னகுர்ச்சி, சீகேஹள்ளி, உத்தரி, நாயகனஹள்ளி, சோடஹள்ளி, நெலகுளி, பிடதி தாலுகாவில் உள்ள கொடியாலகரஹள்ளி, தொட்டகுண்டஹள்ளி, சிக்ககுண்டஹள்ளி ஆகிய பத்து கிராமங்களில் 4,800 ஏக்கர் நிலத்தை விமான நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் சத்தமில்லாமல் தேர்வு செய்துள்ளனர்.
தெற்கு பகுதி ஏன் ?
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தற்போது மாநகரின் வடக்கு பகுதியில் உள்ளது. புதிய விமான நிலையத்தை தெற்கு பகுதியில் அமைப்பது நல்லது என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், தற்போதுள்ள விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தும் பயணிகள் தெற்கு பகுதியை சேர்ந்தவராக உள்ளனர். இது தவிர பெங்களூரு-மைசூரு இடையிலான பத்து வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நைஸ் சாலை மூலம் பிடதியில் அமையும் விமான நிலையத்திற்கு சாலை வழியாக செல்வது மிகவும் சுலபம். கர்நாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவின் அணை கட்டினால், அதுவும் புதிய விமான நிலையத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ராம்நகரம் மாவட்டத்தை தொழில் ஹப்பாக மாற்ற வேண்டும் என்ற டி.கே.சிவகுமாரின் தொலைநோக்கு இலக்கும் வெற்றி பெறும் என்பதால் பிடதியை தேர்வு செய்துள்ளனர்.
ஓசூர் ஏர்போர்ட் திட்டத்திற்கு செக்:
உலகில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் பட்டியலில் பெங்களூரு உள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு ஓசூரை பெரிய தொழில் மையமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பெரிய பெரிய தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது. நகராட்சியாக இருந்த ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளது. பல்வேறு தொழிற்பேட்டைகள், சேட்டிலைட் டவுன்ஷிப்புகள் அமைத்து வருகிறது. மேலும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுடன் அதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் சர்வதேச விமான நிலையம் இருக்கும் பகுதியில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் மற்றொரு சர்வதேச விமான நிலையம் அமைக்ககூடாது என்ற சட்டம் மற்றும் விதிமுறையை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதே சமயத்தில் ஒரு இடத்தில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டால், அதே நிறுவனம் மற்றொரு விமான நிலையம் அமைத்து கொள்ள சட்ட விதிகள் அனுமதிக்கிறது. அதை பயன்படுத்தி பெங்களூரு தெற்கு பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓசூரில் தமிழ்நாடு அரசு அமைக்க திட்டமிட்டுள்ள விமான நிலையத்தை தடுப்பதுடன், தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு செல்லாமல் தடுப்பதற்கான நோக்கத்தையும் நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏக்கருக்கு ₹10 கோடி வேண்டும்
தற்போது பிடதி பகுதியில் ஏக்கர் நிலம் ₹80 லட்சம் முதல் 1 கோடி வரை விற்பனையாகி வருகிறது. தற்போது சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதால், நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலத்தை விமான நிலையத்திற்கு வழங்க வேண்டுமானால் ஏக்கருக்கு ₹10 கோடி கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்து வருவதாக கர்நாடக தொழில் வளர்ச்சி கழக வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
The post கர்நாடகா போடுகிறது புது ரூட்டு… ஓசூர் ஏர்போர்ட் திட்டத்திற்கு வருகிறது வேட்டு: 4,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மும்முரம் appeared first on Dinakaran.