புதுடெல்லி: கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோயிலான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் கோயில் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் வெளியான பதிவில் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோயில் மீது தாக்குதல் நடந்தது குறித்த தகவல்களை அறிந்தோம். கீழ்த்தரமான இதுபோன்ற தாக்குதல்களை வன்மையான சொற்களால் கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளோம். அத்துடன் வழிபாட்டு தலங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.