*விரைந்து தீர்வு காண கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 420 பேர் மனு அளித்தனர். மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ செந்தில்குமார் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்று, சுய வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பயிர்க்கடன், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 420 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தர்ப்பகராஜ், அதன் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்டிருந்த தரைதளத்துக்கு கலெக்டர் நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்தவர்களுக்கு, ஒரு வாரத்தில் வழங்க உத்தரவிட்டார். மேலும், கோட்ட அளவில் நடைெபறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், உலமாக்கள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி ₹35 ஆயிரத்துக்கான காசோலையை வெம்பாக்கத்தை சேர்ந்த ஹாகிரா என்பவரின் குடும்பத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
இளம்பெண் திடீர் தர்ணா
செங்கம் தாலுகா, மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுவாதி என்பவர் தனது குழந்தை மற்றும் தாயுடன், கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காதல் திருமணம் செய்து கொண்ட தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் ₹5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சுவாதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் தனது கோரிக்கை மனுவை சுவாதி அளித்தார்.
The post கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் 420 பேர் கோரிக்கை மனு appeared first on Dinakaran.