சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ் (அதிமுக) பேசியதாவது: கடந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் வாயிலாக, 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தீர்கள். 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள், ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஆணை வெளியிட்டீர்கள். இதற்கான செலவில், ஒரு பெரும் பகுதியை ஊராட்சிகளினுடைய நிதி, ஒன்றியத்தின் நிதி, கனிம வளத்தின் நிதி ஆகியவற்றிலிருந்து, ஒவ்வோர் வீட்டிற்கும் ரூ.1,55,000 வீதம் 47,108 வீடுகளுக்கு மொத்தம் ரூ.730.16 கோடியை அரசு ஆணையின் மூலமாக கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இதற்காக சுமார் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கும் தருவாயில் இருக்கின்றன. இதற்கான நிதிஆதாரங்கள் எங்கிருந்து வந்தன என்று நீங்கள் கேட்டீர்கள். ஓர் அரசினுடைய வளர்ச்சி என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சி, இரண்டு பேருக்கு சாப்பாடு டிபன் கேரியரில் இருக்கிறது என்றால், அதை இரண்டு பேரும் அதை பகிர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதேபோல, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் நிதியைப் பகிர்ந்து, இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.