சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பிற்கிணங்க, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட அனுமதியளித்து, அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. கலைஞர்களின் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கலைமாமணி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களின் விவரங்களையும் சேகரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தங்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு, கலைஞர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன், தங்களின் பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்களை இணைத்து, “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், பொன்னி, எண் 31, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028” என்ற முகவரிக்கு, வரும் 10.06.2025-க்கு முன்பாக விண்ணப்பிக்குமாறு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட அடையாள அட்டைகள் appeared first on Dinakaran.