சென்னை: பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகள் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152, 96, 83,000/- நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர். கோ.வி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உயர்கல்வித் துறைக்கென்று பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 2022ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ரூ.1000 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-2023 மற்றும் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
2024-2025ஆம் ஆண்டிற்கு 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152,96,83,000/- நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி, கோவை, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி, சேலம், அரியலூர், முசிறி, செங்கல்பட்டு, கடலூர் (பெரியார் கலைக்கல்லூரி, திருகொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி), விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வேலூர் ஆகிய பகுதியிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும், கோவை தொண்டாமுத்தூர், நீலகிரி, கூடலூர், குமாரபாளையம், வேடசந்தூர், வீரபாண்டி, கடலாடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, நாகர்கோவில், புதுக்கோட்டை, திருச்சி தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரி, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், சேலம், கொடைக்கானல், சிவகங்கை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளிலும் என 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள், மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு ரூ. 100.15 கோடி நிதி அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் ஆண்டிற்கு வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை மண்டலங்களிலுள்ள 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5281.83 இலட்சம் நிதி தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அரசு தொழில்நுட்ப கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா, ஊத்தங்கரை அப்பிநாயக்கன்பட்டி, அரியலூரில் உள்ள கீழப்பழூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை மாவட்டம் மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், சென்னை குரோம்பேட்டை, தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கல்லூரிகளுக்கு தேவையான வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152, 96, 83,000 நிதி ஒப்பளிப்பு செய்து அரசு உத்தரவு: அமைச்சர் கோ.வி.செழியன் appeared first on Dinakaran.