சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற தயக்கத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கினை தாமதப்படுத்த நினைக்கிறதோ என்னவோ தெரியவில்லை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கள்ளச் சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர் மற்றும் காவல் துறையினருக்கிடையே தொடர்பு இருப்பதாகவும், சிபிசிஐடி விசாரணை என்பது நியாயமாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது.