*வனத்துறை அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும்,கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், இந்த ஆண்டில் ஜனவரி இறுதி வரையிலும் தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது.
பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சியால் கவிருவியில் தண்ணீர் வரத்தின்றி வெறும் பாறையானது. இதனால், பிப்ரவரி 3ம் தேதி முதல் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவமழையால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமானது. சிலநாட்களில் காட்டாற்று வெள்ளபோல்நீர் ஆக்ரோஷமாக ஓடியது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பருவமழை பெய்து வந்ததாலும், அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறைய துவங்கி ரம்மியமாக உள்ளது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.இந்நிலையில், சில மாதத்திற்கு பிறகு கவியருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு, இன்று (6ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கவியருவியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி appeared first on Dinakaran.