காங்கயம் : தெருநாய்களை கட்டுப்படுத்தி,அவை வேட்டையாடியதில் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி காங்கயத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம் காங்கயம் வெள்ளகோவில் முத்தூர் காடையூர் ஊதியூர் சுற்று பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக உள்ளது. அதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பதை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தங்களது தோட்டத்து பட்டியில் மேய்ச்சலுக்கு பின் இரவு நேரத்தில் ஆடுகளை அடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் ஆட்டுப்பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இதுவரை 500க்கும் மேற்பட்ட ஆடுகள்,கோழிகள் மற்றும் கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்றுள்ளது. நேற்று காலை காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி வரவேற்றார்.பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைகால்வாய் காங்கயம் -வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் பேசினர். இதில் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் கலெக்டர் உறுதி அளித்தார்கள்.
ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தாமல் உயிரிழந்துள்ள கால்நடைகள் ஆடு,கோழி, கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக எடுக்க வேண்டும். விவசாய தோட்டத்தில் நடைபெறும் மனித கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post காங்கயத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.