புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திதான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிஉள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. நீல நிற உடை அணிந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள், ‘‘உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கோஷமிட்டபடி அம்பேத்கர் சிலையில் இருந்து, நாடாளுமன்ற நுழைவுவாயில் நோக்கி பேரணி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.