டெய்ர் அல் பலா: காசாவில் இஸ்ரேல் அதிகாலையில் நடத்திய வான் வழி தாக்குதலில் மூத்த ஹமாஸ் படையின் மூத்த தலைவர் உட்பட 23 பேர் பலியானார்கள். இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பலி எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேல் நீடித்த போரை நிறுத்த அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் படி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலானது.
போர் நிறுத்தத்தின் போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணை கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த 1900 கைதிகளுமு் விடுவிக்கப்பட்டனர். எனினும் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் நேற்று அதிகாலையில் காசாவின் கான்யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில்,ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு மூத்த தலைவர் சலா பர்தவில் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். தனித்தனியே நடந்த தாக்குதல்களில் 23 பேர் பலியானார்கள்.
ஜனவரி 19ம் தேதிக்கு பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போரில் காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படைகள் நேற்று இஸ்ரேலை குறி வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஆனால் அந்த ஏவுகணைகள் அனைத்தும் வழிமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
* லெபனான் மீது தாக்குதல்
இதற்கிடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. லெபனானின் உள்கட்டமைப்பு தளங்கள்,ஆயுத தளவாடங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில்,7 பேர் கொல்லப்பட்டனர்.40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
The post காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூத்த ஹமாஸ் தலைவர் உட்பட 23 பேர் பலி: போரில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.