‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,195 பேர் இறந்தனர். இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடிய இஸ்ரேல் ராணுவம், காசா மீது குண்டு மழை பொழிந்தது. அக்டோபர் 27-ம் தேதி காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி தாக்குதலை தொடங்கியது.