டெய்ர் அல் பலாஹ்: காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பள்ளியில் தங்கியிருந்த 27 பேர் கொல்லப்பட்டனர். காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. இந்நிலையில் ஹமாசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து தனது தாக்குதலை அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவின் துபா நகரில் உள்ள பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. இதில் பள்ளியில் தங்கியிருந்த 14 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஷிஜையாவின் அருகில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட காசா குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டதாக அஹ்லி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பள்ளி மீதான தாக்குதலை அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரமான படுகொலை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் கூறுகையில்,‘‘ஹமாஸ் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டது, பொதுமக்களுக்கான பாதிப்பை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
The post காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 27 பேர் பலி, ஏராளமானோர் காயம் appeared first on Dinakaran.