டெய்ர் அல் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் சுமார் 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-காசா இடையே ஜனவரி 19ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை நேற்று நடத்தியது. காசாவில் பத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இஸ்ரேல் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 413 பேர் பலியாகிவிட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் 660 பேர் காயமடைந்துள்ளனர். போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தான் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் தற்காலிகமாக நிலவிய அமைதி குலைந்து மீண்டும் முழு அளவிலான போர் மூளும் வாய்ப்பு உருவாகி உள்ளது. மேலும் ஹமாஸ் பிடியில் இருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணை கைதிகளின் நிலையும் கேள்வி குறியாக்கி உள்ளது. அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பிரதமர் நெதன்யாகு மீது ஹமாஸ் குற்றச்சாட்டியுள்ளது. பிணைக்கைதிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் எச்சரித்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
* ஐநா அதிர்ச்சி
இஸ்ரேலின் வான்வழித்தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டாரெஸ் தெரிவித்துள்ளார். காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் மனிதாபிமான உதவிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும், ஹமாஸிடம் இருக்கும் பிணைக்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று கட்டாரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
The post காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 413 பேர் பலி appeared first on Dinakaran.