காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75வது ஆண்டு வைர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், இலவச ரத்த தான முகாம், இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கட்டுரை போட்டிகள், ஓவிய போட்டிகள், கல்லூரியின் பல்வேறு துறைகளின் சார்பாக கருத்தரங்கங்கள் மற்றும் மாபெரும் “அறிவியல் கண்காட்சி” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன், ஒரு பகுதியாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் அறிவியல் துறைகளின் சார்பில், மாபெரும் அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. வேதியியல் துறை தலைவர் வே.ராஜேந்திரன் வரவேற்பு பேசினார். கல்லூரியின் முதல்வர் ப.முருககூத்தன் தலைமை தாங்கி, கல்லூரியின் வளர்ச்சி மற்றும் அறிவியல் கண்காட்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார். மாவட்ட கல்வி அலுவலக அலுவலர் ஏபிஓ வெங்கடேசன், அறிவியல் கண்காட்சி மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, மாபெரும் அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்களுக்கு தாங்கள் உயர்கல்விக்கு செல்வதற்கான ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்றும், அதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
முடிவில், இயற்பியல் துறை தலைவர் பிகேராஜ் நன்றி கூறினார். இந்த அறிவியல் கண்காட்சியை அரசு மேல்நிலைப்பள்ளி (செட்டி தெரு), அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி (அய்யம்பேட்டை), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (நாயகன் பேட்டை), பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி (மூங்கில் மண்டபம்), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஏகனாம்பேட்டை) ஆகிய பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களும், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியை சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
The post காஞ்சி பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.