பெங்களூரு: குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்யப் பெண் நீனா குடினா, குகையில் தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், ஆரோக்கியத்திற்காக இயற்கையை தேர்வு செய்து வாழ்ந்ததாகவும், 2017ம் ஆண்டே தனது விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறுவது பொய் என்றும் ரஷ்ய பெண் நீனா குடினா தெரிவித்துள்ளார்.ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயது பெண் நீனா குடினா என்ற மோஹி. இவர் தனது 2 குழந்தைகளுடன் பிசினஸ் விசாவில் இந்தியாவிற்கு வந்தார். உத்தர கன்னடா மாவட்டம் கும்டா தாலுகாவில் ராமதீர்த்தா மலையில் உள்ள குகை ஒன்றில் 2 வாரங்களாகத் தங்கியிருந்திருக்கிறார். இந்து மதம் மற்றும் இந்திய ஆன்மீக மரபுகளால் ஈர்க்கப்பட்ட மோஹி, தனது குழந்தைகளான பிரேயா (6) மற்றும் அமா (4) 2 வாரமாக குகையில் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நீனா குடினாவை அவரது குழந்தைகளுடன் கோகர்ணா போலீசார் மீட்டனர்.
தன்னைப் பற்றி பரவிய தகவல்கள் மற்றும் 2017ம் ஆண்டே விசா முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது ஆகியவை குறித்து பேசியிருக்கும் நீனா குடினா, நாங்கள் காட்டில் மிகவும் கடினமான, ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்ததாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. நாங்கள் குகையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். என் குழந்தைகளை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொண்டேன். காட்டில் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த அனுபவம் எங்களுக்கு நிறைய இருக்கிறது. என் மகள்கள் காட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தார்கள். தூங்குவதற்கு ஒரு நல்ல இடம் இருந்தது. களிமண் சிலைகளை செய்து, ஓவியங்கள் வரைந்து, சூடான சுவையான உணவு சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தோம். குகைக்குள் இருந்த பாம்புகள் எங்களை எதுவும் செய்யவில்லை.
எங்களது விசா 2017ம் ஆண்டே காலாவதியானதாக பரவிய தகவல் பொய். எங்கள் விசா அண்மையில் காலாவதி ஆனது உண்மைதான். 2017ம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் 4 நாடுகளுக்குச் சென்றுவிட்டு சமீபத்தில் தான் இந்தியாவிற்கு வந்தோம். என் மூத்த மகன் இறந்தபிறகு நான் சிறிது காலம் இந்தியாவில் இருந்தேன். ஆனால் 2017ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் தான் இருந்தேன் என்று சொல்வது பொய். நாங்கள் ஆரோக்கியத்திற்காகத்தான் இயற்கையை தேர்வு செய்தோம் என்றார்.
The post காட்டில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தேன்: குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷ்ய பெண் நீனா குடினா விளக்கம் appeared first on Dinakaran.