வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.