பெங்களூருவில் ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் பணிபுரியும் சித்தார்த்தின் (ரவி மோகன்) காதலி கடைசி நேரத்தில் வராமல் போனதால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது. தனது நண்பரின் வற்புறுத்தலால் மருத்துவமனை ஒன்றில் அவர் விந்து தானம் செய்கிறார். இன்னொருபக்கம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறியும் ஸ்ரேயா (நித்யா மேனன்) அவரிடமிருந்து பிரிகிறார். கடும் மனவிரக்தியில் இருக்கும் அவருக்கு திடீரென குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது.
செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி மருத்துவமனை செல்லும் அவருடைய வயிற்றில் சித்தார்த்தின் உயிரணுவின் மூலம் குழந்தை உருவாகிறது. அதன் பிறகு வேலை விஷயமாக பெங்களூரு செல்லும் ஸ்ரேயா அங்கு எதேச்சையாக சித்தார்த்தை சந்திக்கிறார். தன் குழந்தைக்கு தந்தை அவர்தான் என்று தெரியாமலேயே சித்தார்த் மீது ஸ்ரேயாவுக்கு ஈர்ப்பு உருவாகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மீதிக் கதை.