கோவை: மேட்டுப்பாளையத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆணவக்கொலை வழக்கில் காதலனின் அண்ணன் குற்றவாளி என கோவை சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு குற்றம் நடந்துள்ளதாக கூறிய நீதிபதி இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது வெள்ளிப்பாளையம். இங்குள்ள சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் வினோத் (27) மற்றும் கனகராஜ் (23). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இதில் கனகராஜ் இதே பகுதியை சேர்ந்த வர்ஷினி ப்ரியா (17) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் அண்ணன் வினோத்துக்கு தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவர் தலித் பெண்ணுடனான காதலை கைவிடும்படி தம்பியை மிரட்டினார்.
ஆனால் இவர்களின் காதல் தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி காதல்ஜோடி சந்தித்து பேசினர். அப்போது அங்கு வந்த வினோத், 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷினி பிரியா 29ம் தேதி உயிரிழந்தார். இரட்டை கொலை செய்த வினோத் போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வினோத்குமாரின் கூட்டாளிகள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை எஸ்சி- எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதல் குற்றவாளி வினோத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் அவர் குற்றவாளி என நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு கூறினார். மேலும் இவர் மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு அந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வினோத்துக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விவாதம் வரும் 29ம் தேதி (புதன்) நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
The post காதல் ஜோடி ஆணவ படுகொலை; வாலிபரின் அண்ணன் வினோத் குற்றவாளி: சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.