திருமலை: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மகள் தன்னுடன் பேசாத வேதனையில் அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சித்யாலாவைச் சேர்ந்தவர் ரெமுதாலா கட்டையா(46). இவரது 20 வயது மகளும் அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்களாம்.
இந்நிலையில் மகள் காணாமல் போனதாக ரெமுதாலா கட்டையா போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையறிந்த கட்டையா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் மகளிடம் பேச வேண்டும் என்று ஆசைகொண்ட கட்டையா பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அவரது மகள் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கட்டையா, நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கட்டையாவின் மகளுக்கு மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் மும்பையில் இருப்பதாகவும், என்னால் வர முடியாது என்றும் கூறிவிட்டாராம்.
The post காதல் திருமணம் செய்த மகள் பேச மறுப்பு:தந்தை தற்கொலை appeared first on Dinakaran.