ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக தற்போது போர்க்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் திறமையான 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன் பார்த்திராத வகையில் போர்க்காட்சிகளைப் பிரம்மாண்டமாகப் படமாக்கி வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் அக்.2-ம் தேதி வெளியாக இருக்கிறது.