*கலெக்டர், மேயர் திடீர் ஆய்வு
நெல்லை : நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள டவுன் தாமரை குளம், கீழ ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக கலெக்டர், மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து கோயிலுக்கு சொந்தமான டவுன் தாமரைகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் வேலி அமைத்து மேற்கூரையுடன் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தென்காசி பகுதியில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள், டவுன் ஆர்ச் அருகே திரும்புவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு டவுன் ஆர்ச் அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று தாமரைகுளம் பகுதி, டவுன் நெல்லையப்பர் கோயில் கீழ ரதவீதியில் சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுகுமார், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நயினார்குளம் சாலையில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கிவரும் பகுதியில் சாலையை விரிவுபடுத்தவும், ஆர்ச் பகுதியில் ரவுண்டானா அமைக்கவும், நெல்லையப்பர் கோயில் முன்பாக கீழரத வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும் இந்த ஆய்வு பணி நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் காந்திமதி யானை நினைவிடத்தை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை, நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், மண்டல செயலாளர் மணிகண்டன் ஆகியோர் காந்திமதி யானை உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்தனர்.
அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சாலை விரிவாக்க பணிக்காக யானை நினைவிடத்தை மாற்றப்போகிறீர்களா எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் அப்படி எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறிசென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
The post காந்திமதி யானை உடல் அடக்கம் செய்யப்பட்ட தாமரைகுளம் பகுதி, கீழரத வீதியில் சாலை விரிவாக்க பணி appeared first on Dinakaran.