ஆஸ்திரேலியாவின் இளம் அறிமுக தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ், பும்ராவிடம் தொடக்கத்தில் தட்டுத்தடுமாறி, பிறகு மரபுவழுவிய ஆட்டம் மூலம் பும்ராவின் புதுப்பந்து அச்சுறுத்தலை ஓரளவுக்கு முறியடித்து ஆஸ்திரேலியாவின் நோக்கத்தை நிறைவேற்றினாலும், அதன்பின்னர் பும்ரா மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவின் டாப் பேட்டர்களான கவாஜா, ஹெட், மார்ஷ் ஆகியோரை பெவிலியன் அனுப்பி பதிலடி கொடுத்தார்.
சாம் கான்ஸ்டாஸ் ஏதோ நல்ல தடுப்பு உத்தியை வைத்துக் கொண்டு பும்ராவை காலி செய்ய வேண்டும் என்று இப்படி ஆடவில்லை. சாம் கான்ஸ்டாஸிடம் அப்படிப்பட்ட தடுப்பாட்ட உத்தியே இல்லை என்பதுதான் விஷயம். ஏனெனில் அவர் ரிவர்ஸ் ஸ்கூப், ஸ்கூப், லாஃப்டட் ஷாட்களை பும்ராவுக்கு எதிராக ஆடி அந்த ஷாட்கள் மட்டையில் சிக்குவதற்கு முன் அவர் தட்டுத் தடுமாறி 21 பந்துகளில் 2 ரன்களையே எடுத்து ஏகப்பட்ட பீட்டன்கள் ஆனார் என்பதுதான் விஷயம்.