புதுச்சேரி: 'வாக்கு வங்கிக்காக காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக வேட்பாளர்களுக்கு சரியான தண்டனையை வழங்க வேண்டும்' என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
இத குறித்து அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக கூட்டணியில் பட்டியல் பிரிவினரின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவுக்கு தேவையில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக அழிந்துவிடும் என திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் கருத்து தெரிவித்திருப்பது சந்தர்ப்பவாத செயலாகும். அதிமுக மீது உண்மையில் திருமாவளவனுக்கு அக்கறையும், பாசமும் இருந்தால் அவர் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.