காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே டேங்கர் லாரி மீது மோதிய தனியார் பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் பலியானான். மேலும் 16 பயணிகள் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றிரவு 50 பயணிகளுடன் தனியார் பஸ் தர்மபுரி நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் கூத்தப்பாடியை சேர்ந்த சேட்டு (50) என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த பஸ் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் நேற்றிரவு 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிவேகமாக ஊருக்குள் நுழைந்தது. அப்போது தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி எதிரே வந்த டேங்கர் லாரியின் பக்கவாட்டின் மீது பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் அடியில சிக்கி கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் மகன் சூர்யா (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரோகித்குமார், அன்பு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் பஸ் டிரைவர் சேட்டு, அதில் பயணம் செய்த ரோஸ்லின் (17), நிஷாந்த் (24), லட்சுமி (43), சின்ன மணி (38), எஸ்தர் (31), மிதுன்குமார் (19), சூரியகலா (29), கமலேசன் (52), அமீர்ஜான் (54), முத்துக்குமார் (47), தர்ஷன் (15) சாந்தா (35) நவீன்குமார் (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்து காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்த 16பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கி 3 டூவீலர்களும் சேதம் அடைந்தன. இந்த விபத்தால் தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரிமங்கலம் அருகே டேங்கர் லாரி மீதுமோதி தனியார் பஸ் கவிழ்ந்ததில் அடியில் சிக்கி சிறுவன் பலி: 16 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.