காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் செந்தமிழ் என்ற மீனவரை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படை கைது செய்தது. இடது காலில் காயமடைந்த மீனவர் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கண்டன ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி போராட்டம் என பலகட்ட போராட்டத்தில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து தங்களுடைய எதிர்ப்பை ஒன்றிய அரசிற்கும் புதுச்சேரி அரசிற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இருந்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகரன் அப்பாராவ் நடத்திய பேச்சு வார்த்தையில் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. வருகின்ற 24 ஆம் தேதி இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் மீனவரின் வழக்கானது விசாரணைக்கு வருவதால் அந்த வழக்கில் மீனவர்களுக்கு சாதகமாக என்ன செய்யமுடியும் அவைகளை ஒன்றிய அரசிடம் பேசி. மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் மீனவர்களுக்கு உறுதி அளித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு பிறகு காரைக்கால் மாவட்ட மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், பத்திரிகையாளர்களிடம் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும்,24 விசாரணைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். மீனவர்கள் 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழில் சார்ந்த ஏராளமானோர் பொருளாதார இழப்பில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பதால் நாளைய தினம் அல்லது 25 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர்.
The post காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.