காரைக்குடி: காரைக்குடி நகரில் அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்களால் விபத்து அபாயம் தொடர்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் செல்லும் முக்கிய சாலைகளாக பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, கல்லுகட்டி, செக்காலை ரோடு, வ.உ.சி ரோடு, கழனிவாசல் சாலை, கல்லூரி சாலை ஆகியவை உள்ளன. செக்காலை ரோடு வழியாக தேவகோட்டை, பழைய பஸ் ஸ்டாண்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள், இதர வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் தங்களது டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஒரு பஸ் செல்லும் அளவிற்கு தான் இடம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இச்சாலையில் குறைவான வேகத்தில்தான் பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் இச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அதிக சத்தத்துடன் ஹாரன் ஒலிக்க செய்கின்றனர். இதனால் டூவீலர் போன்ற வாகனங்களில் செல்வோர் அதிர்ச்சியடைந்து திடீரென கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காரைக்குடி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில்கூட சில தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தும் `கலெக்ஷன்’ போட்டியில் தனியார் பஸ்கள் வேகத்தை குறைப்பதில்லை. இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது. செக்காலை சாலை வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். நகரின் வளர்ச்சிக்கேற்ப புதிதாக சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். மேலும், தேவைக்கு ஏற்ப போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
காரைக்குடி – சூரக்குடி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி மருத்துவமனைக்கு செல்ல போதிய டவுன் பஸ் இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்த பகுதிக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்கப்படும்பட்சத்தில் பாண்டியன் நகர், கேவிஎஸ் நகர், கே.கே. நகர், கம்பன் நகர், மாருதி நகர், விஏஓ காலனி, தாசில்தார் நகர், ஹவுசிங் போர்டு, காவலர் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும். இதேபோல பத்திரப்பதிவு அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், ஆவின் நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படும் வகையில் டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும்.
புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையம், அழகப்பா கல்லூரிகள், செஞ்சை, கல்லுகட்டி, செக்காலை ரோடு, பழைய சந்தைபேட்டை உள்பட நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுற்று பேருந்து இயக்கப்பட வேண்டும். மேலும், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வரும் நேரத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காரைக்குடியில் அதிவேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம் : அச்சத்தில் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.