மதுரை: “தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா சாடினார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசியது: “மதுரை நகரில் இம்மாநாட்டை நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டுகிறேன். சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த தோழர்கள் மண்ணில் இன்று நாம் நிற்கிறோம். இந்திய நாட்டின் பாதுகாப்பான வருங்காலத்துக்கும், அனைத்துத் தரப்பு இந்திய மக்களின் நலன்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள கார்ப்பரேட் மதவெறி கூட்டணிக்கு எதிராக வலிமையான போராட்டம் நடத்த வேண்டும்.