மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.14) நடைபெறுகிறது. சிறந்த மாடுபிடி வீரர், காளை உரிமையாளருக்கு கார் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் நடத்தப்படும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புகழ்பெற்றவை. 2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தமிழர்களுடைய வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி, உலகம் முழுவதும் கவனம் பெற ஆரம்பித்தது. அதன்பிறகு நடந்த போட்டிகளுக்கு உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமில்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகள், திருவிழா போல் மதுரையில் கொண்டாடப்படுகிறது.