பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் அடுத்தடுத்து வந்த 2 கார்கள் மோதியதில் சென்னை கோயம்பேடு வியாபாரியின் கார் மரத்தில் மோதி பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த காரிலிருந்த 12 லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலானது. திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே உள்ள கணப்பாடியை சேர்ந்தவர் நல்லையா(34). பூ வியாபாரி. இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை வைத்துள்ளார். குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி சத்யா(25). மகன் மதுமிதன்(1). இந்நிலையில் கோடைவிடுமுறைக்காக நல்லையா மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் நாகராஜ் மனைவி சரஸ்வதி(31). இவரது மகள் இலக்கியா(16),மகன் சபரிநாதன்(12) ஆகியோருடன் நேற்று நள்ளிரவு காரில் கணப்பாடிக்கு புறப்பட்டார். காரை நல்லையா ஓட்டினார். இந்த காரின் பின்னால், சென்னை ஆவடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மனைவி சிவராணியுடன் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். காரை ஆவடியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(48) ஓட்டினார்.
இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு இபி அலுவலகம் அருகே வந்தபோது திடீரென நாய் குறுக்கே ஓடியதால் நல்லையா பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த ஸ்ரீதர் கார், நல்லையா கார் மீது பயங்கரமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த நல்லையாவின் கார் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் டீசல் டேங்க் சேதமடைந்து வெடித்ததில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே நல்லையா உள்பட 6 பேரும் காரிலிருந்து குதித்து தப்பினர். இதேபோல் மற்றொரு காரில் வந்த ஸ்ரீதர், சிவராணி, செந்தில்குமார் ஆகியோரும் காரைவிட்டு இறங்கினர்.
இதில் நல்லையாவின் காரிலிருந்த ரூ.12லட்சம் ரொக்கம் எரிந்து சாம்பலானது. மேலும் 9 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 9 பேரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கார் மரத்தில் மோதி பயங்கர தீ: ரூ.12 லட்சம் ரொக்கம் சாம்பல் appeared first on Dinakaran.