வட தமிழக கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 31-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக சற்று வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 30, 31 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.