சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும், 7 மாவட்டங்களில் நாளையும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுதற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.