தூத்துக்குடி: காற்றாலை இறகுகளை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,869 காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை படைத்திருக்கிறது.
இதுதொடர்பாக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்பட்டு அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிகரித்துவரும் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்துக்குள் சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பை வழங்கியுள்ளது.