மாஞ்சா நூல் விற்றதாக வடசென்னையைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5000-க்கும் அதிகமான பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடும் பழக்கம் சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பட்டம் பறக்கவிடுவது ஒருவகையான உற்சாகம் தரும் விளையாட்டாக இருந்தாலும், அதற்கு பயன்படுத்தப்படும் நூலை இயற்கையாக தயாரிக்காமல், அதிக உறுதித் தன்மையை கொண்டு வருவதற்காக கண்ணாடித் துகள்கள் உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து மாஞ்சா நூல் என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.
பட்டம் பறக்க விடுவதற்கு இத்தகைய நூல் பயனுள்ளதாக இருந்தாலும், பட்டம் அறுந்து விழும்போது எங்கோ ஒரு பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்து, வாகன ஓட்டிகளின் கண்களுக்கு புலப்படாமல் கழுத்தில் சிக்கி அறுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதன்மூலம் குழந்தைகள், பெண்கள் பலர் பாதிக்கப்பட்டதால், மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் வடசென்னையில் கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூலை தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்திக்கூடம் இயங்கி வருவதை காவல்துறையினர் கண்காணிக்காமல் இருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏதாவது உயிரிழப்பு ஏற்படும்போதுமட்டும் சோதனைகள் நடத்துவதும் மற்ற நேரங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் சமூக அக்கறையற்ற செயலாகவே கருத முடியும்.