சேந்தமங்கலம்: காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி மயானத்தில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் சடலங்களை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் பெரிய வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு கொல்லிமலை சாலையின் வழியாக சென்று அப்பகுதியில் உள்ள மின் மயானத்தின் பின்புறத்தில் கழிவுநீர் வாய்க்காலுக்கு சென்றடைகிறது. விவசாய நிலம் அருகே கழிவுநீர் செல்வதால், அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென டிப்பர் லாரி மண்ணை கொண்டு வந்து மயானம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கொட்டி சென்றுவிட்டனர். இதனால் கழிவுநீர் வெளியேறாமல் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ள மின் மயானம் சுற்றுச்சுவர் அருகிலேயே தேங்கியுள்ளது.
இதனால் மயான சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: காளப்பநாயக்கன்பட்டி பைபாஸ் சாலை அமைப்பதற்கு முன்பு கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஓடைக்கு சென்று விடும். தற்போது பைபாஸ் சாலையோரத்தில் கழிவுநீர் சென்று வந்தது. விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மயானம் செல்லும் வழியில் மண்ணை கொட்டி சென்று விட்டனர். இதனால் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் பல மாதங்களாக கழிவுநீர் மின் மயானம் அருகே தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் சென்று தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சடலங்களை எடுத்துக் கொண்டு சேந்தமங்கலம், நாமக்கல் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள மின் மயான சுற்றுசுவர் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுவர்கள் பழுது ஏற்படும் நிலையில் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விட்டது. எனவே மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேற வாய்க்கால் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.
The post காளப்பநாயக்கன்பட்டியில் மயானத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.