சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல் சார்பில் மகளிர் தின விழாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தொடங்கி வைத்தார். முன்னதாக, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சேதமடைந்த பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதி ரூ.36.64 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, ‘‘பூவையர் புத்துணர்ச்சி சிற்றில்’’ என பெயர் சூட்டப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதியை காவல் ஆணையர் அருண் திறந்து வைத்தார்.
30 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைகளும், 30 படுக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளும், 22 குளியலறைகள் மற்றும் 25 ஒப்பனை அறைகளுடன், பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் குறைந்த வாடகையில் பெண் காவலர்கள் தங்கலாம். புதிதாக பயிற்சி முடித்த மற்றும் சென்னைக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் காவலர்கள் அதிக பட்சமாக 45 நாட்கள் வரையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் காவல்துறையில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சிறப்பான பணிகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து காவல் ஆணையர் அருண் பேசுகையில், கடினமான காவல் துறையில் பெண் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சிறப்பான பணிகள் குறித்து பாராட்டி பேசினார்.
தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் சுப்ரியா சாஹு, அமுதா, காக்கர்லா உஷா, காவல்துறை இயக்குநர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு துறை சீமா அகர்வால், இணை இயக்குநர், மத்திய புலனாய்வுத்துறை வித்யா ஜெயந்த் குல்கர்னி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மனைவி யமுனாதேவி, சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர்கள் கபில் குமார் சி சரத்கர் (தலைமையிடம்), கண்ணன் (தெற்கு), ராதிகா (மத்திய குற்றப்பிரிவு) மற்றும் அதிகாரிகள், காவலர்கள், காவல்துறை குடும்பத்தினர் என சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
The post காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த பெண் அதிகாரிகள், போலீசாருக்கு பரிசு: மகளிர் தின விழாவில் கமிஷனர் அருண் வழங்கினார் appeared first on Dinakaran.